கமல் நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தற்போது மூன்று படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் ‘தக் லைஃப்’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறது. மேலும் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அந்நிறுவனம் சார்பில் எந்த ஒரு ஏஜென்டுகளையும் நடிகர்கள் தேர்வு செய்ய நியமிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.