கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தருணத்தில் இதை அரசியல் ஆதாயமாகவோ விமர்சனமாகவே பார்க்கக்கூடாது. அனைவருக்கும் கடமை உள்ளது. வள்ளுவர் காலத்தில் இருந்தே மது உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கான வழிகளை சொல்லி கொடுக்க வேண்டும். சாராய வியாபாரத்தை செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை கண்டிப்பாக விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும். சாலை விபத்து நடப்பதால் வாகன போக்குவரத்தை நிறுத்த முடியாது. வாகன வேகத்தை குறைக்க முடியாது. இதனால் தான் எக்ஸ்பிரஸ்வே ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தொழிற்சாலைகளில் பெரிய அளவில் மது தயாரிக்கிறார்கள். அதற்காக கடைகளை ஏற்படுத்தி உள்ளனர். ஒரு தெருவில் இருக்க வேண்டிய மருந்துக்கடைகளை விட , அதிக டாஸ்மாக் கடைகள் உள்ளன. குடிக்காதே எனும் அறிவுரை சொல்வதை விட, மிதமாக குடியுங்கள். உங்கள் உயிர் தான் முக்கியம் என அறிவுரை செய்யலாம். இது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் டாஸ்மாக் கடை அருகில் இருக்க வேண்டும். இதை தவிர மருந்து இருப்பதாகவோ, இழுத்து மூடினால் சரியாகிவிடும் என்பது எல்லாம் தவறான கருத்து. இதற்கு உலகத்தில் பல முன்னுதாரணம் உள்ளது. அமெரிக்காவில் மதுக்கடைகள் இருக்கிறது. இதுவே இதற்கு சிறந்த உதாரணம். மதுவிலக்கு கொண்டு வந்த போது , மாபியாக்கள் அதிகமானதே தவிர குறைந்தபாடில்லை. இதுதான் உலகம் கற்றுக்கொண்ட பாடம். இதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்ய வேண்டுமா அதை செய்துள்ளது. இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது. விமர்சனம் செய்யலாம். ஆனால், எத்தனை அரசுகளை செய்ய முடியும். இதற்கு எல்லாம் காரணம் பல அரசுகள். இவ்வாறு கமல் கூறினார்.