பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பச்சை பசேல் என்று காட்சி அளிக்கும் இயற்கை காட்சிகளும் நெல் வயல்கள் தென்னை மரங்கள் தான். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதால் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் ஏராளமான ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர் விவசாயத்திற்கு கால்நடைகள் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது .
இந்த நோயினால் உயிரிழக்கும் மாடுகளை இழந்த விவசாயிகள் கூறும் போது…. அம்மைநோயின் தாக்குதல் வேகமாக பரவி பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய பகுதிகளில் மட்டும் அதிகளவில் உள்ளது குறிப்பாக சினைமாடுகளை குறிவைத்து தாக்குகிறது. அம்மை நோயை கட்டுப்படுத்த மருந்துகளும் இல்லாததால் தங்களுக்கு தெரிந்த பழைய வைத்தியங்களை செய்து வருவதாக கூறும் விவசாயிகள் கால்நடைத்துறை மருத்துவர்கள் இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதனால் தான் இந்த நோய் மளமள வென பரவி வருகிறது.
பொங்கல் விழா கொண்டாட உள்ள நிலையில் கால்நடைகள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது மிகுந்த மனவேதைனை அளிக்கிறது. அம்மை நோயால் உயிரிழக்கும் போது தங்களது சொந்த நிலத்திலேயே குழிதோண்டி புதைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் அரசு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு மேலும் பரவாமல் தடுத்து கால்நடைகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அம்மை நோயை கட்டுப்படுத்துவது குறித்து துறை ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன என்று கால்நடைத்துறை மருத்துவர்களை கேட்டபோது. உயர் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் தங்களால் எந்த பதிலும் கூற முடியாது என்று தெரிவித்தனர்.