கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விவரங்களை எடுத்துரைத்தார். அப்போது, மாடியில் இருந்து குதித்ததால் கூட காயங்கள் ஏற்பட்டிருக்கும் தானே என்று நீதிபதிகள் கேட்டனர். இதனை தொடர்ந்து மாணவியின் தாயார் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.