கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
அதன்படி கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன், சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் (70), குரு (48), மணி (48), சங்கா் (35), பெரியசாமி (40), சுப்பிரமணியன் (56), பரமசிவம் (56), குரு (44), செந்தில், சுரேஷ், குப்பன் மனைவி இந்திரா, சுரேஷ் மனைவி வடிவு (35), ரஞ்சித்குமாா் (37), கிருஷ்ணமூா்த்தி உள்பட 45-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மகேஷ், ஜெகதீசன், ஏசுதாஸ், கண்ணன், குரு, மணி, சங்கா் உள்பட 19 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.சிலர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கருணாபுரம் சிறுவங்கூா் ரோட்டை சோ்ந்த தா்மன் மகன் சுரேஷ் (46) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுவரை மொத்தம் 37 பேர் இறந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் விழுப்புரம், புதுச்சேரி, சேலம், கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு கூடுதல் டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் இருந்தும் 5 டாக்டர்கள் கள்ளக்குறிச்சி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49), போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சிக்கு ஒரு துக்க வீட்டுக்கு வந்தவர்கள் இங்கு கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். மலிவு விலையில் கிடைத்ததால் அவர்கள் அதை வாங்கி குடித்து உள்ளனர். இதன் காரணமாகவே சாவு எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் ரஜத் சதுர்வேதி பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அதோடு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் அப்பகுதி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ஷிவ்சந்திரன், போலீஸ் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், திருக்கோவிலூர் துணை சூப்பிரண்டு ஆகியோரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. 35பேர் உயிாிழந்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் விசாரணை நடத்தி 3 மாதத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுளாளர். அத்துடன் அமைச்சர்கள் உதயநிதி, எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், டிஜிபி சங்கல் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.
எதிர்க்கட்சித்லைவர் எடப்பாடி பழனிசாமியும் இன்று காலை கள்ளக்குறிச்சி சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். கள்ளச்சாராய சாவு காரணமாக கள்ளக்குறிச்சி நகரமே மரண ஓலமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வீடுகளில் ஒருவர், 2பேர் வீதம் இறந்ததால் அங்கு அழுகுரல் சத்தமாக இருக்கிறது. இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட ஆள் இல்லாத பரிதாப நிலையே காணப்படுகிறது.