விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரும்பாக்கத்தில் டி.பி.எல் தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கல்குவாரியில் பணிபுரியும் இறையனூரைச் சேர்ந்த அய்யனார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகிய இருவரும் வழக்கம்போல் இன்று பணிக்கு வந்திருந்தனர். கல் குவாரியில் பாறைகளை எடுப்பதற்காக பள்ளம் தோண்டி வெடி வைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் நின்றிருந்த பகுதியில் திடீரென எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த மண் சரிவில் வெடி வெடிப்பதற்கான டிரில் போட்டு மருந்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்களும் சிக்கிக் கொண்டனர். அதில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்க முயன்றனர். எனினும் அவர்களை வெளியே எடுத்தபோது இரண்டு பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதனிடையே குவாரியில் பணிபுரிபவர்களுக்கு போதிய பாதுகாப்பு உங்கரணங்கள் வழங்குவதில்லை என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.