Skip to content
Home » கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் அருகே மருமகன், மாமியாரை தாக்கிய கல்குவாரி உரிமையாளர்கள்…

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரம் அருகே உள்ளது குரும்பபட்டி கிராமம். இப்பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன் வயது 48. இவருக்கு சுமார் 15 ஏக்கர் நிலம் உள்ளது. இவர் அப்பகுதியில் ஆடு மாடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். நிலத்தின் அருகாமையில் லட்சுமி ப்ளூ மெட்டல் என்ற குவாரி நிறுவனத்தை குருசாமி என்பவர் நடத்தி வந்தார்.

குவாரியில் கற்களை வெட்டி எடுப்பதற்காக அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகளை பயன்படுத்தி வெடிப்பதால் குவாரியில் இருந்து கற்கள் சாமிநாதன் நிலத்திலும், அருகில் இருந்த வீட்டின் மீதும் விழுந்ததால் ஆடு, மாடுகள் உயிரிழந்தும், வீடு சேதம் அடைந்தும் போனது.

பலமுறை அதிக சக்தி வாய்ந்த வெடிகளை வெடிக்க வேண்டாம் என சாமிநாதன் கேட்டுக் கொண்டும் குருசாமி ஏற்காமல் தொடர்ந்து அதிக சக்தி வாய்ந்த வெடிகளை பயன்படுத்தி வந்தார். இதனால், கனிமவளத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்தார் சாமிநாதன். மேலும், குருசாமி நடத்தி வந்த குவாரிக்கு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லைசன்ஸ் முடிந்துவிட்டது. சாமிநாதன் அளித்த புகாரால் மீண்டும் குவாரியை புதுப்பிக்க முடியாமல் போனது.

தனது குவாரி செயல்படாமல் போனதற்கு சாமிநாதன் தான் காரணம் என பலமுறை சாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் குருசாமி. இந்த நிலையில் சாமிநாதன் இடத்தில் இன்று அத்துமீறி கம்பி வேலி எடுக்க குருசாமி முயன்றுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் குருசாமி அவரது மகன் சதீஷ்குமார், அவரது நண்பர் இந்திரமூர்த்தி மற்றும் அடியாட்களுடன் கடப்பாரை, கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் சாமி நாதனை தாக்கி உள்ளனர். இதனை தடுக்க வந்த சாமிநாதனின் மாமியார் பர்வதம் வயது 65 என்பவரையும் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர்.

காயமடைந்த இருவரும் தற்போது கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்த போலீசார் 2 பேரிடமும் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து சாமிநாதனின் மனைவி சிவாராணி செய்தியாளரிடம் தெரிவிக்கும் போது, குருசாமி நடத்தி வந்த குவாரியால் எங்களால் நிம்மதியாக தொழில் செய்ய இயலவில்லை. இதனால் நாங்கள் குடியிருப்பை அருகில் உள்ள புன்னம் பகுதிக்கு மாற்றி விட்டோம். பலமுறை அறிவுறுத்தியும், வேண்டி கேட்டுக் கொண்டும் குருசாமி கேட்காமல் இருந்ததால் புகார் அளித்தோம்.

புகார் அளித்ததால் உங்களால் தான் குவாரி செயல்பட முடியாமல் போனது என, எங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார். அதன் தொடர்ச்சியாக இன்று கம்பி வேலி எடுக்கும் போது ஏற்பட்ட பிரச்சனையில் கடுமையாக தாக்கி உள்ளனர். எனவே, அரசு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!