பஞ்சாபை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுான். அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர். அமெரிக்கா மற்றும் கனடாவில், ‘சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்’ என்ற காலிஸ்தான் ஆதரவு அமைப்பை துவங்கி, அதற்கு தலைமை வகித்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கக்கோரி, இந்த அமைப்பினர் அவ்வப்போது சிறு சிறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பன்னூன் ஒரு குற்றச்சாட்டை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2014ல் நியூயார்க்கில் உள்ள ரிச்மண்ட் குருத்வாராவில், காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அவருக்கு நாங்கள் செய்யும் நிதி உதவிக்கு பிரதிபலனாக, சிறையில் உள்ள எங்கள் அமைப்பின் தலைவர் தேவிந்தர் பால் சிங் புல்லாரை விடுவிப்பதாக அவர் வாக்குறுதி அளித்தார். அதன் பின், 2014 – 22 வரையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 134 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளோம். ஆனால், வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார் இவ்வாறு பன்னூன் பகீரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்..