கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது.
பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி கும்பாபிஷேக விழா நடத்துவது என்று ஊர் மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து கோவில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டனர்.
தற்போது கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.நேற்று குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, மகா கணபதி பூஜை, நாடி சந்தனம், லட்சார்ச்சனை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 2 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
இன்று காலை 2ம் கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை கலசத்திற்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.பின்னர் பொதுமக்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவர் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிசேகம் விமரிசையாக நடைபெற்றன.
திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.கும்பாபிஷேக விழாவையொட்டி விழா கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.