கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு இலச்சினை(லோகோ)வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
சிங்கப்பூர் சென்றிருந்தபோது, அங்கு நடந்த விழாக்களில் கலைஞர் பெயரை சொன்னாலே மக்கள் கைதட்டி வரவேற்றனர். கலைஞர் உருவாக்கிய பாதையில் தான் அனைத்து துறைகளும் பயணிக்கின்றன. உலகத்தமிழர்களுக்காக பாடுபட்டவர் கலைஞர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுபவர் கலைஞர்.
அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில் வெளிநாடு சென்றபோது தான் இந்த எண்ணம் தோன்றியது. உலகளாவிய கண்காட்சிகள், உலக திரைப்பட விழாக்கள், கலை விழாக்கள், போன்றவை நடத்தும் அளவுக்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் என்ற பெயரில் அந்த அரங்கம் ஏற்படுத்தப்படும்.
தற்போது நந்தம்பாக்கத்தில் டிரேட் சென்டர் உள்ளது. அது 10 ஆயிரம் ச.மீட்டரில் கட்டப்பட்டு உள்ளது. அதைக்காட்டிலும் பெரிதாக 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் தற்போது கட்டப்பட்டு வந்தாலும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு அது போதுமானதாக இல்லை. எனவே 25 ஏக்கர் பரப்பில், 5 ஆயிரம் பேர் அமரும் வகையில் நட்சத்திர விடுதி, பூங்கா, உணவகம், மாநாட்டு அரங்கம், ஊடக அரங்கம் ஆகியவற்றுடன் இந்த கலைஞர் கன்வென்ஷன் சென்டர் உலகத்தரத்தில் அமைக்கப்படும். அது இளைஞர்களின் அறிவு குடியிருப்பாக அமையுமானால் அது தான் கலைஞருக்கு நாம் செய்யும் வாழ்நாள் புகழாக இருக்கும். கலைஞரின் புகழ் நூறாண்டு கடந்தும் வாழும்.
இவ்வாறு அவர் பேசினார். இறுதியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நன்றி கூறினார்.