கண்ணாடி மாளிகை, அயல்நாட்டுப் பறவையகம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பூங்கா சென்னையில் இன்று மாலை முதல்வர் திறந்து வைக்கிறார்.
முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்தப் பூங்காவுக்கான கட்டண விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகே 6.09 ஏக்கா் நிலத்தில் ரூ. 25 கோடியில் கலைஞா் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்தப் பூங்கா அமைந்துள்ள இடம் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதைத் தொடா்ந்து, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக் கலைத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவை அமைக்க முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
பூங்காவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. அதில், உயா்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டா் நீளமுடைய ஜிப் லைன், பாா்வையாளா்களைப் படம்பிடிக்கும் கலைஞா்களின் கலைக்கூடம், தொடா் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆா்க்கிட் குடில் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன.
அரிய வகை கண்கவா் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டா் உயரமுடைய 10,000 சதுரஅடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மரவீடு, அருவி, இசை நீருற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் உள்ள சுவா்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. பூங்கா அனுபவத்தை நினைவுபடுத்தும் வகையில் நினைவுப் பரிசுகள் விற்பனை மையமும் உள்ளது.
பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டுப் பறைவகளை பாா்வையிட மற்றும் உணவளித்து மகிழ பெரியவா்களுக்கு ரூ.150, சிறியவா்களுக்கு ரூ.75, மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவா் நடனத்தை காண அனைத்து வயதினருக்கு ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளைக் காண பெரியவா்களுக்கு ரூ.50, சிறியவா்களுக்கு ரூ.40 கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50 எனவும், புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, விடியோ கேமராவுக்கு ரூ. 5,000 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுக் கட்டணங்கள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும்.
இணையதளத்தின் வாயிலாக நுழைவுக் கட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச் சீட்டைப் பெறலாம் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.