Skip to content

ரூ.100 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம்.! அமைச்சர் மா.சு அறிவிப்பு.!

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று “பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்  2023” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில் மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பேராசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதேபோல் 50 கட்டுரைகள் கொண்ட “அறிவேள்வி” எனும் நூலையும் அமைச்சர் வெளியிட்டார்.

இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி கழகம் கட்டப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

இது குறித்த அவர் பேசுகையில், முதன்முதலாக மாணவர்களின் ஆராய்ச்சி திறனை பாராட்டும் வகையில் பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள்  கடைபிடிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் செப்டம்பர் 26ஆம் தேதி பல்கலைக்கழக ஆராய்ச்சி தினமாக தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

இந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி நாளானது இடைநிலை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். பல்கலைக்கழக ஆராய்ச்சி பணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 10 லட்சம் ரூபாய் நிதி உதவி ஆனது இந்த ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 100 கோடி ரூபாய் செலவீட்டில் 7 தளங்கள் கூடிய கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மைய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்.

அதேபோல் மருத்துவ பல்கலைக்கழகமும், தமிழ்நாடு அரசும் இணைந்து சர்வதேச அளவில் மருத்துவ ஆராய்ச்சியில் அனுபவம் அறிவுத்திறனும் கொண்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கும் ‘பன்னாட்டு கருத்தரங்கம்’ ஒன்றை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கானது வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *