தமிழ்நாட்டில் நேர்மைக்கு பெயர் பெற்ற சுதந்திர போராட்ட வீரர் கக்கன். முதல் பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார் கக்கன். காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தார். எளிமைக்கும் நேர்மைக்கும் உதாரணமாக திகழ்ந்த கக்கனின் வாழ்க்கை இப்போது திரைப்படமாகியுள்ளது.
இந்தப் படத்தில் கக்கனாக நடித்திருக்கும் ஜோசப் பேபி, படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியதுடன் தயாரித்தும் இருக்கிறார். என் காதலி சீன் போடுற, இரும்பு மனிதன் ஆகிய தமிழ் படங்களையும் ஒரு சில கன்னட படங்களையும் தயாரித்தவர் ஜோசப் பேபி.
இந்த படத்தை பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கி வருகிறார். தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ,உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கக்கன் பிறந்த ஊரான தும்பைப்பட்டி என்ற ஊரிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான கக்கனின் வாழ்கை வரலாற்று திரைப்படத்தின் இசை, முன்னோட்டம் உள்ளிட்ட ஒலிநாடாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில்ரி, தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவரும், கக்கனின் பேத்தியுமான எஸ்.ராஜேஸ்வரி மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் “கக்கன்” திரைப்படத்தை தயாரித்துள்ளது.