திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்னைகள் குறித்து பேசினர்.
60வது வார்டு திமுக கவுன்சிலரும், திமுகவின் முக்கிய பிரமுகருமான காஜாமலை விஜய் எழுந்து பேசினார். அப்போது அவர், தனது வார்டுக்கு எந்தவித பணிகளும் மேற்கொள்வதில்லை என கூறி கண்ணீரோடு தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆணையர் சரவணன் மற்றும் மேயரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுக்கிறேன் என கூறினார். அவரது பேச்சு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மேயர், ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு புறப்பட்டார்.
என்னுடைய வார்டில் இனியும் பணி நடக்கவில்லை என்றால் நான் தீக்குளித்துக் தற்கொலை செய்து கொள்வேன்.என்று சொல்லிவிட்டு வேகமாக கூட்ட மண்டபத்தை விட்டு கீழே வந்தார். அவர் எங்கே தீக்குளித்து
விடுவாரோ என்ற அச்சத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். பிரச்னைகளை பேசிக்கொள்ளலாம். கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுங்கள் என அவரிடம் கூறினர். ஆனால் அவர் அதை ஏற்காமல் கீழே இறங்கி காரில் இருந்த கெரசினை எடுத்து தனது உடலில் ஊற்றினார். அவர் உடலில் தீவைப்பதற்குள் அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து தடுத்து நி்றுத்தினர்.
இந்த காட்சியை யாரும் படம் பிடிக்க வேண்டாம் என கூறினர். ஆனால் படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த ராஜினாமா கடிதம் ஏற்கத்தக்கது அல்ல என்றனர்.