மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், முதலமைச்சரின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் ஆய்வு செய்தார். தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், சின்ன பகண்டை, கொங்கராயநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகள், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி போன்ற கரையோர பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
எனவே, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மேல்பட்டாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று நேரில் சந்தித்து அரிசி, மளிகை, போர்வை, உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை துணை முதலமைச்சர் வழங்கினார்.
மேலும், மழைக்கால தொற்றுநோய் பரவாமல் இருக்க, அந்த முகாமில் செயல்பட்டு வருகிற மருத்துவ முகாமையும் பார்வையிட்டு, மருத்துவர்கள் – செவிலியர்களுடன் துணை முதலமைச்சர் உரையாடினார். மேலும், முகாமில் உள்ள பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கி, அவர்களின் கோரிக்கைகளை பெற்றுக் கொண்டார்.