பருவ மழை காலங்களின் போது கடலோரப் பகுதியில் ஏற்படும் வெள்ளத்தினால் நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் கிராமத்தில் கடலரிப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி கடலோர பகுதிகளில்
கடல் அரிப்பை தடுக்க 14,கோடி ரூபாய் மதிப்பில் 1280 மீட்டர் நீளம் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க தமிழக அரசு மீன்வளத்துறை மூலம் அரசாணை வெளியிட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து இன்று கடல் அரிப்பை தடுக்க நாகையில் 14,கோடி ரூபாய் மதிப்பில் கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. கீச்சாங்குப்பம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். கடல் நீர் ஊருக்குள் உட்புகுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் அப்பகுதி மீனவ கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.