திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக N நாட்டுக்கோழி கருங்கோழி வெள்ளாடு, காடை உள்ளிட்டவைகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காடை,கோழி வளர்ப்பு குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு புகுந்து இருந்ததை கண்டு
அலறி அடித்து ஓடினார்கள். இது குறித்து விவசாயி செந்தில்குமார் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் சகயராஜ் தலைமையில் வீரர்கள் கணேசன், செந்தில், சுரேஷ், செல்வம், குமரகுரு, பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் 7 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். பின்னர் அங்குள்ள வனப்பகுதியில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை விடுவித்தனர்.