தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே மண்ணியாற்று பாலம் பழுதடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புதிய பாலம் கட்டித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே வடசருக்கை மண்ணியாற்று பாலம் மிகவும் பழுதடைந்து பக்கவாட்டில் உள்ள பக்கவாட்டு சுவர்கள் உடைந்துள்ளது. இதனால் மிகவும் அபாயகரமாக இந்த பாலம் காட்சியளிக்கிறது.
இந்த பாலத்தில் வழியாக தினமும் நூற்றுக்கணக்கில் பைக் மற்றும் கார் போன்றவை சென்று வருகின்றனர். விவசாயிகள் தங்களின்
நிலங்களுக்கு உரம் உட்பட இடு பொருட்களை இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்து சென்று வருகின்றனர். பாலம் மிகவும் பழுதடைந்து பக்கவாட்டு சுவர் இல்லாததால் எந்நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பாலம் மிகவும் தாழ்வாக உள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாலத்தின் மேற்பகுதியில் தண்ணீர் செல்வதால் பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் உருவாகி வருகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாலத்தினை பார்வையிட்டு விபத்து ஏற்படும் முன்பு புதிய பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.