காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர், புதுகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை இன்னனும் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 40.43 அடி. அணைக்கு வினாடிக்கு 89 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,003 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 93.470 டிஎம்சிக்கு பதில் தற்போது 12.313 டிஎம்சி மட்டுமே உள்ளது.
மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கே. ஆர்.எஸ் அணைகளில் இருந்து தான் தண்ணீர் வரவேண்டும். இதில் கபினி அணைக்கு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் கிடைக்கிறது. கே. ஆர்.எஸ். அணைக்கு, கா்நாடக மாநிலம் குடகு மலையில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் கிடைக்கிறது.
கேரளாவிலும், கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டபோதிலும் கேரளாவைப்போல கர்நாடகத்தில் இன்னும் மிகப்பெரிய அளவில் மழை பொழிவு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கே. ஆர்.. எஸ். அணைக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,977 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது. கபினி அணைக்கு நேற்று வினாடிக்கு 6,000 கனாடி நீர்வரத்து இருந்த நிலையில் இன்று 16,977 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி கபினி நீர்மட்டம் 50 அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 65 அடி. அதாவது இன்னும் 15 அடி தான் நிரம்ப வேண்டும். தற்போது வரும் 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தால் கபினி அணை இந்த வாரத்தில் நிரம்பி விடும். அதன் பிறகு வரும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு தான் வரவேண்டும். எனவே வயநாடு பகுதியில் இன்னும் தொடர்ந்து மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதே நேரத்தில் கே. ஆர்எஸ் அணையில் இன்றைய நீர்மட்டம்88 அடி. அணையின் மொத்த உயரம் 124.8 அடி. அதே நேரத்தில் அணையின் மொத்த கொள்ளளவில் இன்னும் பாதி அளவு கூட நி்ரம்பவில்லை. இந்த அணைக்கு குடகுமலையில் பெய்யும் மழை மற்றும் ஹேமாவதி, ஹேரங்கி உபரி நீர் வரவேண்டும். குடகுமலையில் சுமாரான மழை தான் பெய்து வருகிறது என்பதால் கணிசமான தண்ணீர் இன்னும் கே. ஆர்.எஸ். அணைக்கு வரவில்லை.
அதே நேரத்தில் காவிரி ஆணையம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டும் கர்நாடகம் எதையும் கண்டுகொள்ளாமல் தனது அணைகளில் சேகரித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை செப்டம்பர் கடைசி வரை பெய்யும். எனவே வரும் மாதங்களில் அதிக அளவு மழை பொழிந்து கே. ஆர்.எஸ். நிரம்பி மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது என தமிழக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.