திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள காய்ச்சக்காரன்பட்டி கிராமத்தை சேர்த்ந்தவர் தங்கவேல். இவரது மகன் மாணிக்கம்(26). கபடி வீரரான இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கணக்கப்பிள்ளையூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற கபடி போட்டியில், காய்ச்சக்காரன்பட்டியை சேர்ந்த வீரர்களுடன் இணைந்து மாணிக்கம் விளையாடினார். அப்போது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக அய்யர்மலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே மாணிக்கம் உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த கபடி வீரர் மாணிக்கத்தின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகாம் அலுவலகத்தில் கபடி வீரர் மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை, மாவட்ட ஆட்சியர் விசாகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியாங்கா ஆகியோர் உடனிருந்தனர்.