தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே அம்மையாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.சிவபாலன். இவர், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய அளவிலான கபாடி போட்டி, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ளது. அதற்காக 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு, திருவாரூர் மாவட்டம் வடுவூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் அக்.5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர் எம்.சிவபாலன் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான கபாடி போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாட உள்ளார்.
இந்நிலையில், மாணவர் எம்.சிவபாலன், பள்ளித் தலைமையாசிரியர் சி.மாரிமுத்து, உடற்கல்வி இயக்குனர்
என்.திருநாவுக்கரசு, உடற்கல்வி ஆசிரியர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோருடன், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மாணவரைப் பாராட்டி பயனாடை அணிவித்த சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மாணவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கினார்.
அப்போது, உதவி தலைமை ஆசிரியர் கே.சோழ பாண்டியன், முதுகலை ஆசிரியர் ஏ.முருகேசன், பட்டதாரி ஆசிரியர்கள் எஸ்.அடைக்கலமணி, எம்.சரவணபவா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மும்தாஜ் பானு ஆகியோர் உடன் இருந்தனர்.