இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கேள்வி பதில் நேரத்தில் சீனாவில் 14 வயதுக்கு உட்பட்டோரை பாதிக்கும் HMPV வைரஸ் தொற்று பற்றியும், தமிழகத்தில் அதன் பாதிப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
அவர் பேரவையில் கூறுகையில், சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் HMPV எனும் வைரஸானது வீரியமிக்க வைரஸ் இல்லை. இதற்கான பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. இதற்கு ஒரே மருந்து, ஒரு 3 முதல் 5,6 நாட்கள் சும்மா இருந்தாலே போய்விடும் என்பது தான். இதற்கான நாம் எல்லா இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டிய பரிசோதனை செய்ய வேண்டிய நிலை கூட இல்லை.
நோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு HMPV வைரஸ் தொற்று கூட இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இது தனாகவே போய்விடும். இதற்காக பயப்பட வேண்டியதில்லை. பதட்டம் கொள்ள தேவையில்லை. பிரத்யேக தனி படுக்கைகள் கூட தேவையில்லை.
2019-ல் கொரோனா தொற்று வந்த போது WHO (உலக பொது சுகாதார அமைப்பு) ஒரு மருத்துவ அவசர பிரகடனத்தை அறிவித்தார்கள். 2023 மே மாதம் அதே WHO அதனை விலக்கி கொண்டார்கள். குரங்கம்மை பரவிய காலத்தில் WHO அவசரநிலை பிரகடனபடுத்தியது. முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் தமிழகத்திற்கு வரும் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க அறிவுறுத்தபட்டது.
ஆனால், HMPV தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட வேண்டாம். அண்மையில், மத்திய சுகாதாரத்துறை, அனைத்து மாநில சுகாதாரத்துறை ஆணையர்களையும் அழைத்து, இதையே சொல்லி இருக்கிறார்கள். மக்களுக்கு கூறிக்கொள்ளும் பொது அறிவுரை என்னவென்றால், எந்தவித காய்ச்சல், சளி இருப்பவர்களாக இருந்தாலும், அவர்கள் கூட்டமான இடங்களுக்கு சீழ்க்கையில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.” என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.