ஆசிரியர் தேர்வு வாரியம் 2024ல் நடத்தவுள்ள போட்டித் தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அட்டவணையில், அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு ஏப்ரலில் நடைபெறும் என்றும், அதற்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவி பேராசிரியர் பணிகளுக்கு பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடைபெறும் எனவும், நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு, முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூலையில் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 முதுகலை ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட்டில் போட்டித் தேர்வு நடைபெறும் என்றும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் உள்ள 139 இடங்களை நிரப்புவதற்கு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பர் மாதம் தேர்வு நடத்தப்படுமெனவும், அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள 56 உதவி பேராசிரியர் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டு, 2025 பிப்ரவரி மாதம் போட்டித் தேர்வுகள் நடைபெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டுமெனவும், இந்த கால அட்டவணை உத்தேசமானது தான் மாற்றத்திற்கு உட்பட்டதென்றும் ஆசிரியர் தேர்வு வாரிய செயலர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.