கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள ஆனச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார் (50). கூலித் தொழிலாளியான இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு முன் சுனில்குமாரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதற்கு தன்னுடைய மனைவியின் அக்கா தான் காரணம் என்று சுனில்குமார் கருதினார். இதனால் மனைவியின் அக்கா உள்பட உறவினர்கள் மீது சுனில் குமாருக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இவரது மனைவியின் அக்காளுக்கு 14 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி அதிகாலையில் சுனில் குமார் தனது மனைவியின் அக்கா வீட்டுக்கு சென்றார். கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்தார்.
பின்னர் மற்றொரு அறையில் இருந்த 14 வயது சிறுமியை கொடூரமாக பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக வெள்ளத்தூவல் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சுனில் குமாரை கைது செய்தனர். சம்பவம் நடந்தவுடன் அப்போதைய இடுக்கி மாவட்ட எஸ்பியான கருப்பசாமி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடுபுழா அதிவிரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வர்கீஸ், குற்றம்சாட்டப்பட்ட சுனில் குமாருக்கு சிறுவனை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதித்தார்.