மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கு மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. மாயூரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் ஜெகதராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் வி.சிவஞானம், ஆர்.எஸ்.பி.சௌந்தர் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் 18 மூத்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஏற்புரை வழங்கி உயர்நீதிமன்ற நீதியரசர் வி.சிவஞானம் பேசியதாவது: இளம் வழக்கறிஞர்கள் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். செல்வ செழிப்பும் உயர்ந்த அறிவும் உடையவர்கள் தவறான நடத்தையினால் தலைகுனியும் நிகழ்வு நடைபெறுகிறது. இளம் வழக்கறிஞர்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதில் மட்டுமின்றி, ஒழுக்கத்தை கடைப்பிடித்து நீதியை நிலை நாட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மயிலாடுதுறை நீதிமன்றத்தை முழு அதிகாரத்துடன் கூடிய முதன்மை மாவட்ட நீதிமன்றமாக அமைத்துத்தர நீதியரசர்களிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.