சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் போட்போலியோ வழங்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் டி, எம்.எல்.ஏக்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளை தோண்டி எடுத்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து வந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். குறிப்பாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஏற்கனவே கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகளையும் அதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்தார் ஆனந்த் வெங்கடேஷ். மேலும் இந்த விசாரணையின் போது சொத்துக்குவிப்பு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறையின் நடைமுறை மோசமாக உள்ளது. கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை எல்லோரும் வில்லனாக பார்க்கின்றனர்.” என கருத்து தெரிவித்திருந்தார் நீதிபதி. இதனிடையே சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதத்துக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம். அந்தவகையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் தாக்கலான கனிமம், நில சீர்த்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்தல், சுதந்திர போராட்ட தியாகிகள் தொடர்பான ரிட் மனுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இனி அடுத்த மூன்று மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார். ஏற்கனவே, தங்கள் வழக்குகளை வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், தான் விலகமாட்டேன் என உறுதியாக கூறினார் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில், வழக்கமான நடைமுறைப்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது..