கரூர் எம்பியாக இருந்த ஜோதிமணிக்கு இந்த லோக்சபா தேர்தலில் சீட்டு கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் போர்க்கொடி தூக்கினர். சுமார் ஒரு ஆண்டுகாலமாக கரூர் தொகுதியை ஜோதிமணி கண்டுக்கொள்ளவில்லை என திமுக உள்ளிட்ட பலரும் அவருக்கு சீட்டு தரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் தான் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் பாண்டி உள்பட 10 சீட்டுகள் ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த சமயத்தில் திருச்சி தொகுதியை மதிமுக கேட்டதால் அங்கு தற்போதைய எம்பியான திருநாவுகரசருக்கு சீட்டு வழங்க முடியாத நிலையில் கரூர் தொகுதியிலும் ஜோதிமணிக்கு சீட்டு வழங்கவில்லை என்றால் சரியாக இருக்காது என காங்கிரஸ் தரப்பில் திமுக தலைமையிடம் பேசப்பட்டது. இது குறித்து சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தரப்பிலும் பரவாயில்லை மீண்டும் ஜோதிமணிக்கு சீட்டு கொடுத்தாலும் நாங்கள் ஜெயிக்க வைப்போம் என பதில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் அடிப்படையில் திமுகவினர் பம்பரமாக சுழன்று பணியாற்றினர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜோதிமணி ஐந்து பைசா கூட செலவழிக்க விடாமல் செந்தில்பாலாஜி தரப்பினரே செலவு செய்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற ஜோதிமணி அன்றிரவு நிருபர்களிடம் பேசுகையில் திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரையும் பெயருக்கு குறிப்பிட்டு விட்டு சென்றார். இந்த விவகாரம் கரூர் திமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி.,ஜோதிமணி, வெற்றிக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார் அதிலும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் பெயரை குறிப்பிடவில்லை.. தனது பதில் ஜோதிமணி .. ‘நமக்கு எதிராக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பொய் பிரசாரங்களை முறியடித்து, மீண்டும் ஒரு மகத்தான வெற்றியை பரிசளித்த, எமது கரூர் லோக்சபா தொகுதி சொந்தங்களின் மகத்தான அன்பிற்கும், ஆதரவிற்கும் தலை வணங்குகிறேன். மகத்தான வெற்றியை பரிசளித்த எமது மக்களுக்கும், இந்த வெற்றிக்காக அயராது அர்ப்பணிப்போடு உழைத்த இந்தியா கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து அதே அர்ப்பணிப்போடும், நேர்மையோடும் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம். சிறப்பான எதிர்காலத்தை நம் பிள்ளைகளுக்கு உருவாக்குவோம்’ என குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிமணி வேண்டுமென்றே செந்தில்பாலாஜியின் பெயரை குறிப்பிடாமல் தவிர்ப்பதாக திமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் ஜோதிமணி ந.ன்றி மறந்து விட்டதாகவும் கொதிக்கின்றனர்..