கரூர் காந்திகிராமம் மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை பார்வையிட காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி வந்தார். அப்பொழுது திமுக 18வது வார்டு கிளைச் செயலாளர் லோகநாதன் மற்றும் பொது மக்கள், எம்பி ஜோதிமணியிடம்,நீங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு வந்ததும் இல்லை. பொதுமக்களின் குறைகளை கேட்கவில்லை. நீங்கள் வெற்றி பெற,வாக்கு சேகரித்ததால் நாங்கள் உங்களிடம் இதைக் கேட்கிறோம் என்றனர்.
இதைக்கேட்ட ஜோதிமணி நான் ஒவ்வொரு முறையும் கரூரில் மக்களை சந்தித்து தான் வருகிறேன் என்றார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், எந்த தேதியில் வந்தீர்கள், யார் யாருக்கு என்ன உதவிகள் செய்தீர்கள் என்று சொல்லுங்கள், தேர்தல் வருவதால், இப்போது மக்கள் ஞாபகம் உங்களுக்கு வந்து விட்டது. அதனால் தான் வந்து பார்க்கிறீர்கள் என கூறினர். இதனால் எம்.பி. பரபரப்புக்கு உள்ளானார். அப்போது எம்.பியுடன் வந்தவர்களும், அதிகாரிகளும், பிரச்னை வேண்டாம் என சமாதானம் செய்தனர். இதனால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். சிறிது நேரத்தில் எம்.பி. அங்கிருந்து கிளம்பி போய்விட்டார்.