விஜய் கட்சியின் பொதுக்குழுவில் பேசிய ஆதவ் அர்ஜூனா, அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் காரசாரமாக பேசி இருந்தார். ஆதவ் அர்ஜுனாவின்அந்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
என் மாமனார் காசுல நான் சுத்தல, லாட்டரி வித்துக்கிட்டு சுத்தல.. சொந்தமா உழைச்சு சுயம்புவாக உங்க முன்னாடி நிக்கிறேன், இனி தவெகவை லாட்டரி விற்பனை கழகம் என்று மாற்றி விடலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா வெளியிட்ட கருத்துக்கு எதிராக லாட்டரி அதிபர் மார்டின் மகனும், ஆதவின் மைத்துனருமான ஜோஸ் சார்லஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் சார்லஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கும், எங்கள் குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா குறித்த அண்ணாமலை பேச்சை வரவேற்கிறேன். ஆதவ் தனது அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்துக்கொள்ள பிரசாந்த் கிஷோருடன் சேர்ந்து கொண்டு இதர அரசியல் கட்சிகளுடன் பயணித்து வருகிறார். மேலும் ஆதவ் பேச்சால் எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.