ஜார்க்கண்ட்டில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 31ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார். ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம்.அதேவேளை, காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் 47 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பு தொடங்கி நடந்து வருகிறது. ஹேமந்த் சோரன் உள்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் இதில் பங்கேற்று உள்ளனர். சம்பாய் சோரன் அரசு வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.