Skip to content

தபேலா மேதை ஜாகீர் உசேன் அமெரிக்காவில் காலமானார்

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தபேலா  இசை கலைஞர்  ஜாகிர் உசேன் காலமானார். அவருக்கு வயது 73.  “ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நுரையீரல் பிரச்சினையின் காரணமாக உயிரிழந்தார்.” என்று தெரிவித்துள்ளனர்.

உஸ்தாத் ஜாகிர் உசேன் 1951-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தை பிரபல இசைக் கலைஞர் அல்லா ரக்கா. மகனுக்கு 3 வயது முதலே தபேலா கற்பித்தார். பிறவி மேதையானர ஜாகிர் உசேன் 5-வது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார்.

இளமைப் பருவம் மும்பையிலேயே கழிந்தது. செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார். ‘என் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், உனக்கென்று தனியான அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்’ என்றார் தந்தை. அவரது ஆசைப்படியே, தபேலா இசையில் தனி முத்திரை பதித்தார்.

இசைப் பயணம் மேற்கொள்வதை 11 வயதில் தொடங்கினார். 1970-ல் இசை நிகழ்ச்சி நடத்த அமெரிக்கா சென்றார். அதுமுதல் இவரது சர்வதேச இசைப் பயணம் தொடங்கியது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இவரது இசை ஒலிக்கத் தொடங்கியது. ஆண்டுக்கு 150-க்கு மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

‘லிவிங் இன் தி மெட்டீரியல் வேர்ல்டு’ என்ற இவரது முதல் இசை ஆல்பம் 1973-ல் வெளிவந்தது. தொடர்ந்து பல ஆல்பங்களை வெளியிட்டார். இவரது ‘மேக்கிங் மியூசிக்’, கிழக்கு – மேற்கு ஃப்யூஷன் வகையின் தலைசிறந்த ஆல்பமாக கருதப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் கூட்டாக சேர்ந்து பல இசைக் குழுக்களை நிறுவியவர். ஹாங்காங் சிம்பொனி, நியூஆர்லியன்ஸ் சிம்பொனி ஆகியவற்றிலும் பங்கேற்றுள்ளார். அமெரிக்க இசைக் கலைஞர் பில் லாஸ்வெல்லுடன் இணைந்து ‘தபேலா பீட் சயின்ஸ்’ என்ற பிரம்மாண்ட இசைக் குழுவை நிறுவினார்.

‘வானப்பிரஸ்தம்’ என்ற மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்து, அதில் நடித்தார். இஸ்தான்புல் சர்வதேச திரைப்பட விழா, மும்பை சர்வதேச திரைப்பட விழா, தேசிய திரைப்பட விருது விழா ஆகியவற்றில் இது விருதுகளைக் குவித்தது.

பத்மஸ்ரீ விருதை 37 வயதில் பெற்றார். 1992-ல் ‘கிராமி’ விருது பெற்றார். தாளவாத்தியப் பிரிவுக்கு முதன்முதலாக வழங்கப்பட்ட விருது இது. மீண்டும் 2009-ம் ஆண்டிலும் ‘கிராமி’ விருது பெற்றார். பத்ம பூஷண், சங்கீத நாடக அகாடமி உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். பாராம்பரிய இசைக்காக அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு ஃபெலோஷிப் பெற்றவர். 2023 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!