அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பால்குட ஊர்வலமானது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள ஸ்ரீ தில்லை காளியம்மன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வேலாயுத நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தனர்.
அதனை தொடர்ந்து மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும், கொரோனா போன்ற உலக நன்மை வேண்டி மகா சக்தி மாரியம்மனுக்கு திரவிய பொடி, மாவு பொடி, மஞ்சள், சந்தனம் இளநீர் தேன், தயிர், பால், எலுமிச்சை மற்றும் பழங்கள் உள்ளிட்ட 21 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், ஊர் நாட்டாமைகள், மற்றும் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.இதில் பலரும் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து வந்தனர். பால்குடம் எடுக்கும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமியை தரிசித்து சென்றனர்.இதில் பெண் பக்தர்களுக்கு அருள் ஏற்பட்டு சாமி வந்து ஆடியதால் பக்தர்கள் மத்தியில் பரவசம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.