அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இதில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய விவசாய பயிர்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை, எள் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் வந்துள்ளனர். ஆனால் விவசாயிகளுக்கு டோக்கன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாகவும், இதன் காரணமாக பயிர்களை விற்பனை செய்வதற்கு மூன்று நாட்களுக்கும் மேலாக இரவு பகலாக காத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் விற்பனை செய்த பயிர்களுக்கு ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டிய பணத்தை, ஒரு மாதத்திற்கும் மேலாக பணத்தை தராமல் இழுக்கடிப்பு செய்வதாகவும் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதிகாரிகளின் சமரசத்தால் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து அதே நிலை நீடித்து வருவதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், இன்று ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.