அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்ய அமர்ந்திருந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான பயணிகள் பேருந்திற்காக காத்திருந்தன
அப்பொழுது பேருந்து நிலையத்திலிருந்த மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார வயர்கள் பற்றிய தீ பொறியாக பரவி சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுநர்கள் தங்களது பேருந்துகளை அவசர அவசரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் பயணிகளும் தப்பி ஓடினர். இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மின்சாரத்தை உடனடியாக நிறுத்தி, மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் பொதுமக்களை ஒழுங்கு படுத்தினர். மின்கம்பம் ஒரு மணி நேரத்தில் சீரமைக்கப்பட்ட பின்னர் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டது. இரவு விட்டுவிட்டு பெய்த மழை காரணமாக மின்கசிவு ஏற்பட்டு, வயர்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது.