அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில், ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில், கடந்த 21 ஆண்டுகளாக கார்த்திகை மாதம் முதல் தேதி, ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர்.
கார்த்திகை முதல்நாள் தொடங்கி தினந்தோறும் ஐயப்பனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெறுகிறது.
மார்கழி மாதம் 1ம் தேதி ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து ஐயப்பன் சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேரள செண்டை மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சுவாமிகள் பல அவதாரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.