அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அனைத்து தரப்பினர் பயின்று வரும் இப்பள்ளியில், உடையவர் தீயனூரைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சார்ந்த மாணவர்கள் விக்கிரமங்கலம் கடைவீதியில் பைக் ரேஸ் விடுவதும், மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதனைத் தட்டிக் கேட்டு தகராறு செய்வதும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அப்பள்ளியில் ஒரு
தரப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல், இரு சமுதாய மக்களிடையே பரவியது.இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் பள்ளிக்குச் சென்று இரு தரப்பு மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு இரு தரப்பைச் சேர்ந்த தலா 9 பேர் வீதம் 18 மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.