அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் 16 கிலோமீட்டர் வரையிலான சாலை குண்டும் குழியுமாக இருந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்துள்ளது. எனவே இந்த சாலையை தரம் உயர்த்தி புதிய தார் சாலையாக அமைத்து தர வேண்டும் என கிராம பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடந்த 6 மாத காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தார் சாலை அமைக்க முன் வரவில்லை. மேலும் மீன்சுருட்டியில் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்த பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காத தமிழக அரசை கண்டித்து, மீன்சுருட்டியில் இருந்து வெத்தியார்வெட்டு கிராமம் வரை சாலைகளில் கருப்பு கொடி கட்டும் போராட்டம் நடத்தப் போவதாக கிராம பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு சிந்தனையாளர் இயக்க போராட்ட குழுவினர் அண்மையில் அறிவித்தனர். அறிவித்தபடி இன்றைய தினம் தற்போது சாலைகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் ஏந்தியும் ஊர்வலமாக சென்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்காத அரசுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம் எனவும் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதால் தற்போது பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.