அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தில்குமார் (40) இவர் ஜெயங்கொண்டம் மின்வாரியத்தில் கேங்மேனாகா பணியாற்றி வருகிறார் .இவர் இன்று உட்கோட்டை கிராமத்தில் மின் பழுதை சீரமைக்கும் வகையில் மின் கம்பத்தில் ஏறியவர் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவம் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் மின்சாரம் தாக்கி இறந்து போன கேங்மேன் செந்தில் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இவருக்கு சூர்யா (35) என்ற மனைவியும் சரன் (10) சுகன் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயங்கொண்டம் பகுதியில் கேங்மேன் இறந்த சம்பவம் அவரது மனைவி மற்றும் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட உறவினர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மருத்துவமனையில் மகன்கள் இருவரும் அப்பா ……அப்பா …… அப்பா வேணும் என அழுது கதறிய காட்சி காண்போரை கண்கலங்க செய்தது. இந்நிலையில் மின்சார வாரியத்தில் இருந்து அதிகாரிகள் எவரும் வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இறந்து போன செந்தில்குமாருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் குடும்பத்தில் அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் ஜெயங்கொண்டம் டு கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.