அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நேரில் சென்று ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வழக்கு கோப்புகள் மற்றும் ஆவணங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள், போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் குறித்தும் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜனிடம் கேட்டறிந்தார். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும், வழக்குகளை விசாரித்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வரும் பொது மக்களை கண்ணியமாக நடத்தி வழக்கு குறித்து முழுமையாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போலீஸ் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமான மதுவிற்பனை, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்பு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களை தீவிரமாக கண்காணித்து மீண்டும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும், மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை முறையாகவும், பாதுகாப்பாக பராமரிக்கவும், போலீஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருக்கவும் போலீஸார்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸார்களிடம் குறைகள் குறித்து கேட்டு அறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
ஆய்வின் போது சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார்கள் உடன் இருந்தனர்.