தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான முதல் மிதமானவரை மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்து வானம் மேகத்துடன் காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதலே வானில் கரு மேகங்கள் சூழ்ந்து லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் திடீரென கனமழை பெய்தது. பலத்த
இடி, மின்னலுடன் பெய்த இம்மழையானது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. கனமழை காரணமாக சாலை வழியெங்கிலும் மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. குறிப்பாக ஜெயங்கொண்டம் நான்கு ரோடு, காவல் நிலையம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில், போதிய வடிகால் வசதி இல்லாததன் காரணமாக மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர் என்பதை குறிப்பிடத்தக்கது.