அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசேகர்(45). இவர் வாரியங்காவல் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வாரியங்காவலில் தனது வீட்டின் அருகில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையினை மணி சேகரின் தாயார் தனலட்சுமி நடத்தி வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி மளிகை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த வாரியங்காவல் சுப்ரமணியர் கோவில் தெருவை சேர்ந்த மாயவேல் (44) என்பவர், கத்தியுடன் கடைக்குள் புகுந்து தனலட்சுமியை மிரட்டி பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுக்கவே, அசிங்கமாக திட்டி பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் பயந்து போன தனலட்சுமி தனது மகன் மணிசேகருக்கு போன் செய்து விட்டு கடையில் உள்ளிருந்து வெளியில் வந்துள்ளார். மணிசேகர் கடைக்கு வருவதற்குள, மாயவேல் கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மணிசேகர் கொடுத்த புகாரின் பேரில், மாயவேல் மீது போலிசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாயவேல் மீது அரியலூர் மாவட்டத்தில்பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.