அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன். இவர் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் கரடிகுளம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் அருகே ஒரு கட்டிட வேலை செய்து வருகிறார். வேலை நடைபெறும் இடத்திலேயே கட்டிட வேலைக்கான இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டு, கட்டிட பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கட்டிட வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்களை, டாட்டா ஏசி வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நெடுமாறனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து நெடுமாறன் வருவதற்குள், மர்மநபர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து நெடுமாறன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கரடிகுளம் பகுதியில் வாகன சோதனையில் போலிசார் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்தி, அதில் வந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார், டாட்டா ஏசி வாகனத்துடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது நெடுமாறனுக்கு சொந்தமான கட்டுமான பொருட்களை திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.மேலும் விசாரணையில் கரடிகுளம் கிராமத்தை சேர்ந்த தர்மதுரை, கார்த்திக், மணிமாறன் மற்றும் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரையும் கைது செய்து டாடா ஏசி வாகனம் 400 கிலோ எடையுள்ள இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை போலிசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
