தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் இயந்திரத்தின் மூலம் பயண சீட்டுகள் வழங்கப்பட்டாலும் 40% பேருந்துகளில் டிக்கெட் கிழித்தே வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள விசாலாட்சி நகரில் அரசு பேருந்து கிழித்து வழங்கப்படும் பயண சீட்டு ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சேலம் மற்றும் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தன. 220 ரூபாய் பயண சீட்டிலிருந்து ஒரு ரூபாய் பயண சீட்டு வரை 300-க்கும் மேற்பட்ட பேருந்து பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது. அரசு
போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது மர்மமாக உள்ளது. போக்குவரத்து கழகத்திலிருந்து டிக்கெட்டுகளை நடத்துனர்களுக்கு வழங்கும் போது டிக்கெட்டின் எண்கள் உள்ளிட்டவற்றை குறித்துக் கொண்டே நடத்துனருக்கு வழங்கப்படுகிறது மேலும் நடத்துனர்கள் இரவு நேரங்களில் கணக்கை ஒப்படைக்கும் போது டிக்கெட்டுகளின் எண்களின் அடிப்படையில் கணக்கை ஒப்படைக்க வேண்டும். எனவே அரசின் சார்பில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டாக இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என கூறும் சமூக ஆர்வலர்கள் பேருந்துகளில் வழங்குவதற்காக போலியாக டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு இவ்வாறு சிதறி கிடக்கின்றனவா என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பயண சீட்டுகள் ஒரே இடத்தில் குவிந்து கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.