அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது
எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊர் சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் ஒன்று இரண்டு மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் பிராஞ்சேரி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் சில கிராமங்களை இணைப்பதற்கு மக்களின் கருத்துரை கேட்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் பிராஞ்சேரி ஊராட்சியையும் இணைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமை தாங்கி முகாமில் பொதுமக்கள் அளித்த
மனுக்களை ஒவ்வொன்றாக வாங்கி ஆய்வு செய்தார். அப்போது பிராஞ்சேரி ஊராட்சியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமமக்கள் ஒன்று திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, இதற்கு உரிய ஆய்வு செய்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
பின்னர் இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது என்றும், இதனால் ஊராட்சிக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்காது என்றும், நகராட்சியுடன் இணைத்தால் வரிகள் இரட்டிப்பாகும். 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது. ஊராட்சிக்கான சலுகைகள் ரத்து செய்யப்படும். எனவே அரசு அறிவித்த இந்த அறிவிப்பை நீக்கி மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்க தவறினால், அடுத்த கட்டமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்தனர். இச்சம்பவம் காரணமாக ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது