தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வந்தவர் ராஜசேகரன்(65), கடந்த 3 தினங்களுக்கு முன், திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு பெண் எஸ்ஐ. தலைமையில் 4 போலீசார் பட்டுக்கோட்டையில் உள்ள ராஜசேகரன் நகைக்கடைக்கு சென்று, நீங்கள் திருட்டு நகை வாங்கி உள்ளீர்கள். உங்களிடம் விசாரிக்க வேண்டும் என அழைத்து சென்றனர்.
கடையில் இருந்து அவரது வீட்டுக்கு சென்று அங்கிருந்து ராஜசேகரன் மனைவி தனலட்சுமியையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துக்கொண்டு திருச்சி வந்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டுக்கோட்டை நகைக்டை அதிபர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை டிஎஸ்பியிடம் புகார் செய்தனர். இது தொடர்பாக அவர் திருச்சி கே.கே. நகர் போலீசாரிடம் விசாரித்து உள்ளார்.
பின்னர் பட்டுக்கோட்டையில் உள்ள நகைக்கடை அதிபர்கள், பொற்கொல்லர் சங்க நிர்வாகிகள் திருச்சி வந்து கேகே நகர் போலீசாரிடம் பேசி நகைக்கடை அதிபர் ராஜசேகரன், தனலட்சுமி ஆகியோரை அழைத்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து எர்ணாகுளம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தையொட்டியுள்ள செட்டியக்காடு என்ற இடத்தில் வந்தபோது ராஜசேகரன், ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் ரயிலில் அடிபட்டு சிதறியது. இறந்தவர் யார் என உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
ரயில்வே போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அருகில் ராஜசேகரனின் பைக் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்தது. ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆவார். எனவே தற்கொலை செய்து கொண்டது ராஜசேகரன் என உறுதி செய்த போலீசார் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தும் இதை உறுதி செய்தனர்.
இந்த தகவல் இன்று காலை பட்டுக்கோட்டை முழுவதும் பரவியது. நகைக்கடை அதிபர்கள், பொற்கொல்லர் சங்கத்தினர், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமார் 500 பேர் ராஜசேகரன் சடலம் வைக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரி முன் மறியல் செய்தனர். அத்துடன் நகைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்று மாலை அனைத்து கடைகளும் 2 மணி நேரம் அடைக்கப்படுகிறது.
இதுகுறித்து ராஜசேகரனின் மனைவி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, பெண் எஸ்.ஐ. செய்த டார்ச்சர், மற்றும் பணம் கேட்டு விடுத்த மிரட்டல் காரணமாகத்தான் ராஜசேரகன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்கமாட்டோம் என கூறி உள்ளனர். இதனால் பட்டுக்கோட்டையில் பரபரப்பு நிலவுகிறது.