கோவையில் தமிழ்நாடு சதுரங்க கழக தலைவர் மாணிக்கம், பொதுச்செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, துணை தலைவர் ஆனந்த நாராயணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மாநில செஸ் அசோசியேசன் செஸ் போட்டியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது ஐ.எம் நார்ம் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில் சென்னையில் துவங்கிய ஐ.எம் நார்ம் போட்டிகள் இடைவெளியின்றி கடந்த 17 வாரங்களாக நடத்தப்பட்டது.இதிலிருந்து 8 வீரர்கள் ஐ.எம் நார்ம்களை பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹர்ஷ் சுரேஷ், பாண்டிச்சேரியை சேர்ந்த ஸ்ரீஹரி ஆகியோர் மூன்று ஐ.எம் நார்ம்கள் மற்றும் 2,400 தர மதிப்பீடு எடுத்து சர்வதேச மாஸ்டர் பட்டத்திற்கான தகுதியை பெற்றுள்ளனர்.வருடத்திற்கு ஒரு சர்வதேச மாஸ்டர் கிடைத்து வந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் இரண்டு பேர் சர்வதேச மாஸ்டராகி இருப்பது பெரிய விஷயம். இது போன்ற போட்டிகள் மூலம் வருடத்திற்கு 10 மாஸ்டர்களை உருவாக்க முடியும். பள்ளி தேர்வுகள் நடப்பதால் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் போட்டிகள் ஜூலை மாதம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு பின் இளைஞர்களிடம் பெரிய மாற்றத்தை காண முடிகிறது. ஏராளமான இளைஞர்கள் செஸ் போட்டிகளில் பங்கேற்க ஆர்வம்காட்டி வருகின்றனர்.அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் செஸ் போட்டிகளை நடத்தி வருகிறது. நகர் மட்டுமின்றி ஊரக பகுதியில் இருந்தும் பலர் வர துவங்கியுள்ளனர். இந்நிலையில், செஸ் போட்டிகளை நடத்துவதில் ஏற்படும் நிதிசுமைகளை குறைக்க அரசு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.