இந்திய அரசின் 60% மானியத்துடன் கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் நடக்கும் உலகளாவிய ஜவுளி கண்காட்சி வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ளது. இந்த கண்காட்சியில் ஆடை பிராண்டுகள், டிசைன் ஸ்டுடியோக்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் வணிகர்கள், வர்த்தக அமைப்பின் பிரதிநிதிகள், விநியோகஸ்தர்கள், ஆடை மற்றும் ஜவுளி இயந்திர இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், மொத்த
விற்பனையாளர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்த ஜவுளி கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தயாராகி வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கரூர் தனியார் விடுதியில் நடைபெற்றது.
அப்போது கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதன் உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்…
அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் ஜவுளி வர்த்தக கண்காட்சியில் கரூரைச் சேர்ந்த ஏராளமான வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முறை நடைபெறும் கண்காட்சியில் புதுமையான வடிவமைப்புகளை காட்சிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம், மறுசுழற்சி முறையில் தயார் செய்யப்படும் ஆடை வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக மூங்கில் நார், வாழைநார் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஆடை வடிவமைப்புகள் இடம் பெற உள்ளன. கரூர் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து ஜெர்மனியில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான உணவு தங்குமிடம் போக்குவரத்து வசதி ஆகியவற்றிற்கு இந்திய அரசு சார்பில் 50 முதல் 60 சதவீதம் மானியம் கிடைப்பதாக தெரிவித்தனர்.