விக்கிரவாண்டி-தஞ்சாவூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியிலும் இந்த பணி நடக்கிறது. சில இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு காடுவெட்டி பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது.இதில் கனரக வாகனமான பொக்லைன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
சாலை அமைக்கும் பணி அதிகாலை 2 மணி வரை நடைபெற்றதாக தெரிகிறது. பின்னர் பொக்லைன் இயந்திரத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தனியார் நிறுவன ஆட்கள் தங்களது இருப்பிடத்திற்கு வந்ததாக தெரிகிறது. அதிகாலை 4 மணியளவில் பொக்லைன் இயந்திரம் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுப்படுத்தினர். எந்த எந்திரம் தானாக தீப்பிடித்ததா, அல்லது யாரும் தீ வைத்தார்களா என போலீசார் விசாரிக்கிறார்கள்.