1991-96ல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து வாங்கி குவித்ததாக வழக்கு பதிவுசெய்தனர். அத்துடன் நகைகள், பாத்திரங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் தங்கம், வைர நகைகள் பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டன. அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க, வைர நகைகள், 1562 ஏக்கர் நிலத்திற்கான பத்திரங்கள் நீதிபதி மோகன் முன்னிலையில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அவற்றை போலீஸ் பாதுகாப்புடன் சென்று தமிழக அரசின் உள்துறை இணை செயலாளர் ஹனிமேரி பெற்றுக்கொண்டார். அவை பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்படுகிறது.