கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வத்து கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. குறிப்பாக பண்டிகை சமயங்களில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்றிருக்கும் நபர்களின் வீடுகளை அதுவும் வசதியான நபர்களின் வீடுகளை குறிவைத்து நள்ளிரவு நேரத்தில் பூட்டு மற்றும் வீட்டு கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் கடந்த சில நாட்களாக கோவையில் அரங்கேறியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் தங்களது சொந்த ஊருக்கு மற்றும் சுற்றுலா தளங்களுக்கு ஒரு சிலர் குடும்பத்தோடு சென்றுவிட்டனர். அந்த வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியிருப்பது கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு
அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த ராம் (36). கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சுவாதி இன்சூரன்ஸ் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருக்கு சென்றுவிட்டனர்.
மீண்டும் இன்று அவர்கள் திரும்பி வருவதற்காக தயாராகி இருந்தனர். இந்நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை அவர்கள் இன்று காலை பார்த்துள்ளனர் .அப்போது இன்று அதிகாலையில் ஐந்து மர்ம நபர்கள் வீட்டில் காம்பவுண்ட் கேட்டை ஏறி குதித்து உள்ளே சென்று பொருட்களை கையில் எடுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் .உடனே அவர்கள் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் ஆனந்த ராம் வீட்டில் பீரோவில் 35 பவுன் நகைகள் மற்றும் ஐந்து கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போயிருப்பதாக போன் மூலம் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்து பார்த்த பிறகு வேறு ஏதேனும் பொருள்கள் திருடு போய் உள்ளதா என்பது தெரியவரும். மர்ம நபர்கள் ஐந்து பேரும் ஜட்டி அணிந்து முகத்தை துணியால் கட்டி மறைத்துக் கொண்டு வந்திருப்பது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் அந்த மர்ம நபர்கள் லட்சுமி நகர் பகுதியில் சாலையில் ஓரமாக நடந்து செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில் இதே போல கோவையில் ஒரு சில இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரின் மனைவி மோகனாம்பாள் (45). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். மீண்டும் அவர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த தங்க கம்மல், காமாட்சி வெள்ளி விளக்கு ,லேப்டாப், செல்போன், ஒரு ரூபாய் நோட்டுகள் 300 எண்ணிக்கையில் என்பன உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது .இது குறித்து மோகனாம்பாள் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூசாரி பளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் சுரேஷ்குமார்( 35). இவர் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் .கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு சென்ற அவர் மீண்டும் கோவைக்கு திரும்பினார் .அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்த நிலையில் இருந்தது .
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 5¼ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து சுரேஷ்குமார் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் என்பவரின் மகன் பிரபு (39 ).இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார் .மீண்டும் நேற்று அவர் வீடு திரும்பினார் .அப்போது வீட்டில் மேற்கூரை உடைந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 12 ½ பவுன் தங்க நகைகள், 56 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரபு குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் .
இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . சிங்காநல்லூர் அடுத்த உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவரின் மகன் ஆனந்தகுமார் (40). இவர் வெப்சைட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் .நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் வேலை செய்துவிட்டு ஜன்னல் அருகே படுத்து தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்த போது ஜன்னல் அருகே வைக்கப்பட்டிருந்த லேப்டாப் மற்றும் 3,500 பணம் வைக்கப்பட்டிருந்த பர்ஸ் ஆகியவை திருடு போயிருந்தது. மர்ம நபரகள் ஜன்னல் வழியாக திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆனந்த் குமார் சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார் .புகாரின பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . கோவை ரத்தினபுரி பகுதியைச சேர்ந்தவர் வேல்ராஜ் என்பவரின் மகன் சக்திவேல் (37). இவர் தனது வீட்டின் பீரோவில் 2½ பவுன் தங்க நகைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்திருந்தார் .நேற்று அவர் பீரோவை திறந்து பார்த்த பொழுது நகை மற்றும் பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது. இது குறித்து சக்திவேல் ரத்தினபுரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பூட்டி இருந்த வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பீளமேடு பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே கும்பலை சேர்ந்தவர்களா அல்லது வேறு வேறு நபர்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெளியூருக்கு சென்றிருக்கும் பலர் இன்று மாலையில் தான் தங்களது வீட்டுக்கு திரும்புவார்கள் .இன்னும் வேறு ஏதேனும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தபோதிலும் ஜட்டி கொள்ளையர்கள் கோவையில் தங்களது கைவரிசையை காட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.